Saturday, December 7, 2019

கை கொடுக்கும் அதி மதுரம்


கை கொடுக்கும் அதி மதுரம்
ஒவ்வொரு மூலிகையிலும், ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உண்டு. இதில், வேர்ப்பகுதி மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக உள்ள அதிமதுரத்தின் சக்தி, அதைப் பயன்படுத்தியவர்களுக்கு புரியும்.
அதிமதுரம், எளிய முறையில் பயன்படுத்தினாலே, பல நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்கு தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது இது.
மலச்சிக்கலை போக்குவதில் சிறப்பிடம் வகிக்கிறது. சிறுநீர்ப்பை புண்களை ஆற்றுவதில், இதற்கு நிகர் வேறில்லை. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும், சம அளவு எடுத்து வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு, ஐந்து கிராம் அளவில், தேனில் குழைத்து சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
அதிமதுரம், சீரகம் சிறிதளவு எடுத்து பொடித்து வைத்து, 20 கிராம் பொடியை 200 மி., தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலையில், மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்துக்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

மலட்டுத்தன்மை நீங்கும்
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து, எலுமிச்சை சாறில் அரைத்து, தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி
வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று நாட்கள் உட்கொண்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும்.
அதிமதுர சூரணத்தைத் தயாரித்து, சிறிதளவு தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

காலையில் சுகம்: அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து, இடித்துச் சலித்து, இரவு படுக்கும் போது, சிறிதளவு பாலில் கலந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது.
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம், சிறிதளவு எடுத்து, இரவு, தூங்கப் போகும் போது சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால், காலையில் மலச்சிக்கல் இருக்காது. உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
போதியளவு தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு, ஒரு கிராம் அதிமதுர சூரணத்தை பாலில் கலந்து, சிறிதளவு இனிப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை முடி உதிர்வது குறையும்.
சளி தொந்தரவா? அதிமதுரம், அரிசி திப்பிலி, சித்தரத்தை மூன்றையும், தலா பத்து கிராம் அளவில் சேகரித்து, முசுமுசுக்கை இலை, ஆடா தொடை இலை ஆகியவற்றை, 200 மி., நீர் விட்டு காய்ச்சி சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு என, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும்.
ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை எளிதாக நீங்கும்


No comments:

Post a Comment